பட்டினமாம் உயிரைக் காக்கும் பெருமாள்
உடல் உபாதைகள், நோய்கள், ஆசை, பாசங்கள் அனைத்தும் மனித உடலில் தோன்றகின்றன. இதனால் நல்லதும் கெட்டதும் உண்டாகின்றன. கெட்டவைகள் போக்க வேண்டுமானால் நாராயணனை வணங்கி வீடுபேறுவது மட்டுமே ஒரே வழி. அப்படி வணங்கினால் பட்டினமாம் நம் உயிரை பெருமாள் காப்பான் என்கிறார் பெரியாழ்வார். இதனை இக்கட்டுரையில் காணமுற்படுவோம்.
நெய்க்குடமும் எறும்பும்
நெய்க்குடத்தை அதன் வாசைன கருதி பயன்பெறும் நோக்கினால் எறும்புகள் அதன்மேல் ஏறி பயன்பெறும். அதுபோல என் உடம்பில் நிலைத்து நிற்கிற நோய்களே நீங்கள் பிழைப்புக்கு வேறு இடம் செல்லுங்கள், ஏனென்றால் பிரமனுக்கு வேதத்தை அருளியவனும், பாம்பு படுக்கையில் இருப்பவனுமான பெருமாள் என் உடலை அவரதாக்கினார். அதனால் என் உயிர் அவனால் காக்கப்பெறுகிறது என்பர் பெரியாழ்வார்.
நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்
காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து
வேதப் பிரானார் கிடந்தார் (நாலா. 443)
இரவும் பகலும் ஓதுவித்துப் பயிற்றிப் பணிசெய்ய
பெருமாள் இரவும் பகலும் நல்லறிவைப் புகட்டினான். அதனைச் செயல்படுத்த அடியேனைக் கைக்கொண்டான். ஆதனால் வயிற்றில் சிறை கிடந்த கருவாழ்வு போனது. எமதூதர் கயிற்றால் கட்டி இழுக்க முடியாதபடி செய்தான். கோரைப் பற்களின் மீது உலகைத் தூக்கிக் காத்தவன் பெருமான் என்பர் பெரியாழ்வார்.
வயிற்றில் தொழுவைப் பிரித்து
வன்புலச் சேவை அதக்கிக்
கயிற்றும் அக்கு ஆணிகழித்துக்
காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை
இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் (நாலா. 445)
சித்திரகுப்தர் எழுத்தும் எமதூதுவர்களின் ஓட்டமும்
மனிதர்கள் செய்யும் நன்மை, தீமைகளை சித்திரகுப்தன் எழுதி வைப்பார். ஆதனை அடிப்படையாகக் கொண்டு எமதூதர்கள் இறப்பைத் தருவர். அத்துடன் தண்டனையை வழங்குவான். ஆனால் பெருமாளை வணங்கியதால் எமதூதர்கள் ஓடியதாக பெரியாழ்வார் கூறுவர்.
சித்திரகுத்தன் எழுத்தால்
தென்புலக்கோன் பொறிஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்துத் திரைகடல் சேர்ப்பன்
மூதறிவாளர முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன்
பண்டு அன்று பட்டினம் காப்பே (நாலா. 444)
வினைகளால் வந்த நோய்களே – தொடுவது எளிதில்லை
பெரியாழ்வார் பெருமாளை வணங்கினால் உடல் அவனிடம் சேர்ந்துவிடுகிறது. அதனை அவன் காக்கிறான். அதனால் உடலில் நோய்கள் தொடமுடியாது என்பர். அவமானப்படாமல் நோய்களே பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவர் பெரியாழ்வார்.
மங்கிய வல்வினை நோய்காள்
உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்
எளிது அன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான்
சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின் (நாலா. 446)
இரண்டறக் கலத்தலும் ஐம்புலன்களின் ஓட்டமும்
பெருமாளுடன் நான் இரண்டறக் கலந்துவிட்டேன். அதனால் நான் - அவன் என்ற வேறுபாடில்லை. ஐம்புலன்களாகிய குறும்பர்களே என்னைவிட்டு வேறிடம் செல்லுங்கள் என்பர் பெரியாழ்வார். ஏனென்றால் உயிர் அவனால் காக்கப்படுகிறது.
மாயன் என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத
வைத்துக் கொண்டன் பிறிதுஇன்றி
வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின்
பண்டு அன்று பட்டினம் காப்பே (நாலா. 447)
நோய்களே – வினைகளே நடமின்
என்னை விடாமல் துன்புறுத்தும் நோய்களே, என் உடல் பசுக்களை மேய்த்த கண்ணனுடைய திருக்கோயிலாகிவிட்டது. பிறவிக் கடலை உண்டாக்கும் வினைகளே எனக்கு ஒருவிதப் பற்றுதலும் கிடையாது. நடங்கள், என் உயிர் பெருமாளால் காக்கப்படுகின்றது என்று பெரியாழ்வார் நோயையும், வினையையும் விரட்டுவதைக் காணலாம்.
உற்ற உறுபிணி நோய்காள்
உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
ஆழ்வினைகாள்! உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் (நாலா. 448)
பெண்ணாசையிலிருந்துப் பிரித்துக் காத்தான்
பெண்களின் மீது மோகங்கொண்டு பிரானை வணங்காமல் அழிந்துபோகும் வண்ணம் செய்யாமல் தன் வலிய வினையாலே என்னை மாற்றினான். பட்டினமாகிய உயிர் அவனால் பாதுகாக்கப்படுகிறது.
கொங்கை சிறுவரை என்னும்
பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு
அழுந்திக் கிடந்து உழல்வேனை
வங்கக் கடல்வண்ணன் அம்மான்
வல்வினை ஆயின மாற்றிப்
பங்கப் படாவண்ணம் செய்தான் (நாலா. 449)
என் மனக்குற்றங்களை நீக்கி – திருவடி முத்திரைப் பதித்தான்
பெருமாள் வாழ்வுண்மை உணர்த்தும் ஆசிரியனாய் இருந்து, என் நெஞ்சில் நுழைந்து, என் மனதில் உள்ளக் குற்றங்களை நீக்கி என் தலைமீது தன் திருவடி முத்திரையைப் பதித்து அருளினான். ஆதனால் என் உயிர் அவனால் காக்கப்படுகிறது என்பர் பெரியாழ்வார்
ஏதங்கள் ஆயின எல்லாம்
இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார்
பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம்
புகுந்து என் சென்னித் திடரிற்
பாத இலச்சினை வைத்தார் (நாலா. 450)
பெருமாளின் படைகளே உடலை காவல் செய்க
பெரியாழ்வார் தன் உடலை இறைவன் காக்கின்றான் என்பர். ஏனென்றால் தன் உடலில் - உள்ளத்தின் என அனைத்திலும் இறைவன் நீக்கமற இருக்கிறான். அதனால் தன் உடலை, திருவாழியே, வலம்புரியே, குற்றுடைவாளே, சாரங்க வில்லே, செண்டுப் படையே, எட்டுத் திசைகாக்கும் பாலகர்களே, கருடனே, உறங்காமல் எம்பெருமான் திருப்பள்ளியறையாகிய என் உடலை குறிக்கொண்டு காவல் செய்யுங்கள் என்பர் ஆழ்வார்
உறகல் உறகல் உறகல்
ஒண்சுடர் ஆழியே! சங்கே!
ஆற எறி நாந்தக வாளே!
அழகிய சார்ங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த
எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல்
பள்ளியறை குறிக்கொண்மின் (நாலா. 451)
முடிவுரை
இறைவனை வணங்கினால் வீடுபேறு கிடைக்கும். ஆதனால் நோய்கள் - வினைகள் அண்டாது. அதுமட்டுமின்றி இறைவனைக் காப்பதுபோல் இறைவனின் படைகளும் நம்மைக் காக்கும். மனக்குற்றங்கள் அழியும். ஆணவங்கள் அழியும். ஐம்புலன்களும் அடங்கி நல்வழியில் செல்லும். எமபயம் போகும். கண்ணனை வணங்கினால் ஆசிரியனாய் உள்ளத்தில் புகுந்து நல்வழி காட்டுவான் என்னும் முடிவுகளை இவ்வியலில் காணலாம்.
No comments:
Post a Comment