Wednesday, 10 June 2015

இந்திரா விழாவும் சமூக நிலையும்

                                       இந்திரா விழாவும் சமூக நிலையும்

விழா எடுத்தல்
    புகார் நகரத்து மக்கள், தத்தம் ஒழுக்கங்களில் மாறுபடாமல் வாழும் சிறப்புடையவர்கள். அந்நகரின் பண்பானது மேலும் சிறப்புற அகத்தியர் விழா எடுக்குமாறு மன்னனுக்குக் கூறினான். தூங்கெயில் எறிந்த தொடித்தேட் செம்பியன் அகத்தியன் சொற்படியே தேவர்களின் தலைவனை வணங்கினான். இருபத்தெட்டு நாட்கள் நடைபெறு விழாவில் தாங்கள் வந்து தங்கியிருக்க வேண்டுமென வேண்டினான்.
            ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்ப
            தூங்கெயில் எறிந்த தொடித்தேட் செம்பி
            நாலேழ் நாளினும் நன்கினி துறைக
                                (சிலம்பு.விழா. 3-10).

கேள்வி ஞானம் உடையோர் தவறார்
    இறைவனுக்குச் செய்யும் விழாக்களில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இறைவனும், தேவர்களும் மக்களுள் ஒருவராக கலந்திருப்பார். எனவே, தேவர்களுடன் இணைந்திருந்த வாய்ப்பு விழாக்காலங்களில் வாய்க்கும் என்பர். இதனை,
            தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்
            நாலேழ் நாளினும் நன்கறிந்தீர்
                                    (சிலம்பு. விழா. 66-67)
என்ற வரிகளில் காணலாம்.

விழா திட்டமிடும் குழு
    விழாவை செம்மையாக நடந்த அனைத்து வகை தொழிலாளர்கள், வல்லுநர்கள், அரசவையில் கூடுவர். சமயக்கணக்கர்கள், காலக்கணிதர்கள், தேவவுருவினை மறைத்து மனித உருவில் வாழும் கடவுளர்கள், பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் எனும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயத்தினரும் என பல்வேறு ஆற்றல் நிரம்பியவர்களும் கூடி விழா நடத்த திட்டமிடுவர் என்கிறார் .
மணிமேகலை,   
                மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
                இத்திறம் தத்தம் இயற்பினில் காட்டும்
                சமயக் கணக்கரும், தந்துறைபோகிய
                அமயக் கணக்கரும் அகலாராகிக்
                கரந்துரு எய்திய கடவுளாளரும்
                பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
                ஐம்பெருங்குழுவும் எண்பேர் ஆயமும்
                வற்தொருங்கு குழீஇ                (சிலம்பு. விழா.11-20)

பூதம் துன்பந்தரும்
    ஆரசன் முசுகுந்தனுக்கு முன்னாள் வந்துற்ற துயரத்தினை நாளங்காடி பூதம் போக்கியது. மேலும், விழா எடுக்காவிட்டால் செவ்வர்ய் மடித்துத் தன் வலிமையான பற்கள் வெளித்தோன்ற நகருக்குத் துன்பத்தைச் செய்யும். பாவியரை புடைத்து உண்ணும் சதுக்க பூதமும் விழா எடுக்காவிட்டால் தன் செயலைச் செய்யாது என்று மணிமேகலைக் கூறுகின்றதைக் காணலாம்.
                கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
                விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
                மடித்த செவ்வாய் வல்;லெயிறு இலங்க
                இடிக்குரல் முழக்கத்து இடும்பைச் செய்திடும்
                தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப்
                புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும்
                                    (சிலம்பு. விழா. 19- 24)
விழாவும் வள்ளுவனும்
    விழா பற்றிய செய்தியை மக்களுக்கு அறிவிப்பவன் பெயர் வள்ளுவன். அவன் தொல்குடிப் பிறந்தோன் ஆவான். வச்சிரப்படை நிற்கும் கோயிலிடத்தே நெய்வளம் நிறைந்திருக்கும் முரசத்தினை, யானையின்மீது ஏற்றிவைத்துக் கொல்லேற்றின் தோலினைப் போர்த்திருப்பதும், இடிமுழக்கம் ஒலி போன்றும் கூற்றைக் கூப்பிட்டு அழைப்பது போன்றும் குறுந்தடி கொண்டு அடித்து முழக்குவார் என்று மணிமேகலை கூறுகின்றது.
                வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
                கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
                ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கிற்
                கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
                முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
                                (சிலம்பு.விழா. 27-31)
விழாவில் மக்கள் செய்ய வேண்டுவன
    கொடிகள் விளங்கும் வீதிகளிலும், கோயில் வாயில்களிலும், பூரண கும்பங்களும் பொற்பாலிகை பாவை விளக்குகளும், மங்கலப் பொருள்களுடன் பரப்புவீர்களாக என்பர் முரசறைவோர். மேலும், காய்த்த குலைகளோடு கூடிய கமுகும் வாழையும் வஞ்சியும், பூங்கொடி வல்லியும் கரும்பும் நட்டு வைப்பீர்களாக, தெருத்திண்ணைகளில் உள்ள தூண்களில் முத்துமாலைகளை தொங்க வைப்பீர் என்பர். புழநகரின் வீதிகள், மன்றங்களிலும் பழமணலை மாற்றிப் புதுமணலைக் கொணர்ந்து பரப்புங்கள். கதலிகைக் கொடியும், காமூன்று கொடியுமாகக் கொடுங்கை மாடங்களிலும் வாயில்களினும் சேர்த்து வைப்பீர்களாக என்றும் கூறுவர்.
                தோரண வீதியும், தோமறு கோட்டியும்
                பூரண கும்பமும், பொலம் பாலிகைகளும்
                பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
                காய்க்குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
                பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
                பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
                முத்துக் காமம் முறையொடு நாற்றுமின்
                விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
                பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்
                கதலிகைக் கொடியும் காமூன்று விலோத
                மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
                                (மணி. விழாவறை. 43-53).

கோயில்களில் வழிபாடுகள்
    சிவபெருமான் முதலாக இவ்வூரில் வாழும் சதுக்கபூதம் உள்ளிட்ட கடவுள்களுக்குச் செய்ய வேண்டிய முறையான பூசைகளைச் செய்தனர். இந்திரவிழாவை நடத்தவதால் அனைத்து கோயில்களுக்கு சிறப்பு உண்டாவதை அறியலாம்.
                நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
                புதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈறு ஆக
                வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
                ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
                                (மணி.விழாவறை. 54 – 57)

மரபினை மாற்றாமல் அறிந்தோர் செய்க என்று கூறுவதன் மூலம் பண்பாட்டைப் பேணிக் காக்கும் தன்மையை உணரலாம்.
ஒற்றுமையும் - கருத்துக்களை விவாதித்தலும்
    குளிர் மணல் பந்தரிலும், அனைவரும் தங்கும் அம்பலங்களிலும், புத்தர் கூறிய நல்லுரையை தெரிந்துகொள்ள செல்லுங்கள் என்பர். விழாக்காலங்களில் பெரியோர், அறிஞர்கள் சமய உரையாற்றுவர் என்ற குறிப்பை மணிமேகலையின் மூலம் உணரமுடிகின்றது. அவரவர் சமயக் கருத்துக்களை எடுத்துக் காட்டுக்களுடன் வாதிக்கும் சமயவாதிகளே, பட்டி மண்டபத்தின் இயல்பறிந்து வாதிடுங்கள் என்பர். பகைவரிடத்துச் சீற்றமுமு; போரும் கொள்ளாது நீங்குகள் என்பர்.
                தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
                புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்
                ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
                பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
                பற்றா மாக்கள் - தம்முடன் ஆயினும்
                செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
                                (மணி.விழாவறை. 58 - 63)

விழாக்காலங்களில் மனிதருள் தேவர்கள்
        விழாக்காலங்களில் அனைவரும் கடவுளை வழிபட செல்ல வேண்டும். ஏனென்றால் விழாவில் தேவரும் மக்களும் வேறுபாடின்றி இருபத்தியெட்டு நாட்களிலும் சேர்ந்து உலாவுவர். எனவவே, விழாக்காலங்களில் மக்கள் செய்யும் நல்லறங்கள் தேவர்களை நேரடியாகச் செல்லும் என்ற கருத்தை வள்ளுவன் மூலம் சீத்தலைச் சாத்தனார் கூறுவர்.
                தேவரும் மக்களும் ஒத்து உடன்திரி தரும்
                நால்ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
                                (மணி.விழாவறை. 66 – 67)

விழாவின் நோக்கம்
    விழா எடுப்பதால் நகரம் இறையருள் பெரும் அதனால் பசியும், பிணியும், பகையும் நீங்கும். மக்கள் வளமுடன் வாழ்வர் என்ற கருத்தின் மூலம் விழாவின் நோக்கத்தை அறியலாம்.
                பசியும் பிணியும் பகையும் நீங்கி
                வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
                                    (மணி.விழாவறை. 71 - 73)

முடிவுரை
    விழா எடுப்பதால் நாடு நலமுடன் இருக்கும்.
    கேள்வி ஞானமுடையோர் தவறாமல் விழாவில் பங்பேற்பர்.
    விழாவைச் சிறப்பாக நடத்த குழு உண்டு.
    விழா எடுக்காவிட்டால் பூதம் பாவியரை தண்டிக்காது.
    வள்ளுவன் விழா நடப்பதை அறிவிப்பான்.
    விழாவின்போது மலர், விளக்கு, தோரணம் கொண்டு அழகுச் செய்வர்.
    கோயில்களிலும் வழிபாடு செய்வர்.
    வுpழாவில் தேவர்களும் வருவர். பகைமை போற்றாமாட்டார்கள்.
       

                   

No comments:

Post a Comment