Tuesday, 14 June 2016

பாரதிதாசன் பாடல்களில் தமிழ்மொழியும் தமிழ்த்தொண்டும்

 பாரதிதாசன் பாடல்களில் தமிழ்மொழியும் தமிழ்த்தொண்டும்
                                   முனைவர் கு. வெங்கடேசன்


   பாரதிதாசன் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார். அதனால் தமிழ்மொழி பற்றியும், அதற்குண்டாகும் இழிவுநிலை பற்றியும் தமம் தமிழியக்கம் கவிதையில் விரிவாகக் கூறியுள்ளார். இதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. தமிழ் அழகும் நெஞ்சம் குமுறலும்       
    பாரதிதாசன் தமிழினைப் பெருமையாகக் கூறுவர். கரும்புசாறு, நறுஞ்சுளை, முல்லையே என்று தமிழைககக் கூறுவர். இத்தகைய இனிய தமிழை இரும்பு போன்று நெஞ்சுடையோர் அதன் அழகை அழிப்பதை நினைத்து நெஞ்சமும், வாயும் துன்பப்படுகின்றது என்பர்.

         கரும்பு தந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே கவின்செய் முல்லை
        அரும்பு தந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே
        இரும்பு தந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்எழிலை ஈடழித்து
        வரும் புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக்கும் சொல்ல
        வாய்பதைக்கும்
         (தமிழிய. 1)

2. தமிழ் அழகு போற்றும் விதம்
    எடுத்து மகிழும் இளம் குழந்தை, யாழ், நறுந்தேன், ஓவியமாகவும், செழும்பொருள், விளக்கு, நல்லுயிர், உயிர் இயக்கும் நுண்கலை, சுவைப்பாட்டு, பழைய நிலவு, புத்துணர்வு, மயில், அறிவு ஒளி, ஆடல் தரும் செந்தமிழ் என்றெல்லாம் தமிழை மகிழ்ந்து போற்றுவர் பாரதிதாசன்.

        உடலியக்கும் நல்லுயிரே
        கடலியக்கும் சுவைப்பாட்டு
        வையத்தின் பழ நிலவு
        வாழ்வுக்கோர் புத்துணர்வு (தமிழ் இயக். 45)

3. இருப்பதை விட
    தமிழ் உணர்வின்றி வாழும் மக்களிடையே வாழ்வதைவிட இறத்தலே மேல் என்கிறார். பாரதிதாசன் வாணிகர்கள், அரசியலாளர்கள், புலவர்கள், இல்லறத்தார் என அனைவரும் தமிழ் உணர்வில்லாமல் இருக்கிறார்களே என்று வேதனைப்படுகிறார்

        வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ
        அரசியல்சீர் வாய்க்கப்பெற்றோர் ஆணிகர்;த்த பேடிகளே
        அரும்புலவர் ஊமைகளோ (தமிழியக்கம். 6)

4. கோவில், கல்வி நிலையங்களில் தமிழ்
    கோவில் தலைவர், காப்பாளர், விழா எடுப்போர், திருமணம் செய்வோர் கல்விதரும் கணக்காயர், மாணவர்கள் தமிழை முறையாகப் பயன்படுத்தவில்லை என்று வேதனைப்பட்டு தீயர்களோ? என்பார் பாரதிதாசன்.

        மிகுகோவில் அறத்தலைவர் அறநிலையக் காப்பாளர்
        விழா எடுப்போர்
       தகுமாறு மணம்புரிவோர் கல்விதரும் கணக்காயர் (தமிழியக். 7)       

5. கூத்தர், பாடகர், அச்சகத்தார்
    மகிழ்சியூட்ட வரும் கூத்தர்கள், வாய்ப்பாட்டு பாடுபவர்கள், இசைப்பாடல் ஆடுவோர், சொற்பொழிவாளர் என பலரும் தமிழை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று பாரதிதாசன் வேதனைப்படுகிறார்.

        மகிழ்ச்சிசெய வருங்கூத்தர் மாத்தமிழை மாய்ப்பது உண்டோ
        வாய்ப்பாட்டாளர் இகழ்ச்சியுற நடப்பதுண்டோ
        இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார் (தமிழியக். 8)

6. எழுத்தர்கள், அச்சகத்தாரிடம் தமிழ்
    ஏடு எழுதும் எழுத்தாளர்கள், எழுத்துக்களை அச்சிடும் அச்சகத்தார்களிடம் தமிழ் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்று வேதனைப்படுகிறார் பாவேந்தர். மாறாக தூற்றும் மொழிகளைப் பயன்படுத்தி வாழும் மக்களிடையே வாழ்வது முறையில்லை என்று வருந்துவதைக் காணலாம்.

        கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்
        தீமை மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ
        சொல்லாக்கத்தார் தூற்றுமொழி ஏன் சுமந்தார் (தமிழியக். 9)

7. பொருளுடையாரும் அரசியலாளரும்
    நல்ல பொருள் உள்ளவர்களும், அரசு ஆணை செய்யும் அரசியலாரும் செந்தமிழ் நாட்டிலே தமிழைப் போற்றிப் பாதுகாக்க முன்வரவில்லை என்று பாரதிதாசன் ஏக்கமிடுகிறார்.

        நல்ல அரும்பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்
        நாட்டில் ஆணை சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்
        நாடிது என்றும் தெரியார் போலும்
        வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார் (தமிழியக். 10)

8. வரிப்புலியே தமிழ்கலக்க
    தமிழ்த்தாயின் முன்னேற்றம் நம் முன்னேற்றம் என்பார் பாரதிதாசன். கண்டறிந்து தமிழில் புது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பார். துறைகள்தோறும் தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும். வயிற்றுக்கு உணவில்லாத நிலைபோக்க பொருள் செய்வாய். இலக்கியம் செய் என்பதுடன் அறத்தைச் செய் என்றும் பாரதிதாசன் கூறுவர்.

9. மங்கையர் தமிழுக்குப் பாடுபடுக.
    பெண்களே தமிழின் உயர்வுக்குப் பாடுபடவேண்டும். தமிழின் மானம் காப்பாற்றப் படவேண்டும். இல்லையெனில் உங்கள் நெற்றி வெட்கப்படும் என்பர் பாரதிதாசன். மேலும் உதடு, வாய், நெஞ்சம் வாட்டமுறும் என்றும் அறிவுறுத்துவர். நுகர் நோக்கிச் செல்லும் பெண்கள் தமிழைச் சரியாகப் பேசாமல் செல்லும் போக்கை அடையாளம் காட்டுவர்.

        மறுமலர் வாய்த்தாமரையும் கணிதயுதடும் நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்
        நகர்நோக்கிப் பசுந்தோகை நாடகத்து மாமயில்கள் நண்ணியாங்கு
                                   
10. முதியோர் தமிழுக்குப் பாடுபடுக
    முதியவர்களே வயதாகிவிட்டது என்று தளர்ச்சி அடையாதீர்கள். தமிழுக்குத் தொண்டு செய்தால் இளமை கூடும். தமிழ்த்தாய்க்குக் குறை ஏற்படுவதைத் தவிர்க்க குறித்து வாருங்கள். உங்கள் நரம்புகள் இரும்பாகும் என்பர் பாரதிதாசன். முன்வைத்த காலை பின்வைக்காமல் தமிழ் அன்னையை எதிர்த்தவரைப் போரிடல் போல தமிழுக்குப் பாடுபட வேண்டும் என்று முதியோரை ஊக்குவிப்பதைக் காணலாம்.

        'தண்டூன்றும் முதியோரே தமிழ்த்தொண்டு என்றால் இளமைதான்  

         எய்தீரோ
         அன்னையினை எதிர்த்தார்க்கும் அவள் மேன்மை மறந்தார்க்கும்
                                        அயர்ந்தவர்க்கும்
         முன்வைத்த காலை பின்வையாமே வரிசையுற முடுகுவீரே.  
          (தமிழியக்கம். 18)

11. வாணிகரே தமிழுக்கு உழைக்க வாரீர்.
    வாணிகர்களே முகவரியை எழுதும் பலகையில் ஆங்கிலத்தில் எழுதாதீர்கள். தமிழில் எழுதுக என்பர் பாரதிதாசன். ஆணி முதல் அணிகலன் விற்பவர் வரை வெட்கமில்லாமல் தமிழில் எழுதாமல் பிறமொழிகளில் எழுதுகிறார்கள் என்று பாவேந்தர் வருத்தப்படுகிறார். உணவு விடுதியை கிளப் என்றும் பட்டுத் துணிக் கடைக்குச் சில்க்கு என்றும் எழுதுகிறார்களே என்பர். தென்றலில் குளிர் இல்லையா என்றும் தோப்பில் நிழல் இல்லையா என்றும் பாரதிதாசன் கூறுவர்.

    அறிவிப்புப் பலகைகளில் தமிழ்ச்சொற்களால் எழுதலாம். அதனால் குற்றம் ஏற்படாது. பேச்சு, எழுத்து, பாட்டு, கூத்தால் தமிழின் இனிமையால் பரப்புக. மாறாக, பிறமொழி கலந்து பேசுவதால் தமிழுக்கு இழுக்கே என்பர் பாரதிதாசன். இப்படிச் செய்வதே தமிழுக்குத் தொண்டு செய்வதாகும் என்பர் பாவேந்தர்.

        பவன் மண்டல் முதலியன இனியேனும் தமிழகத்தில்
        அவண் சென்று முழங்கிடுவீர் ஆங்கிலச் சொல் இந்திமொழி  
        பயிலாவண்ணம்
        இவண் தமிழில் கலப்பதுண்டோ வடசொல் யாவும்.

முடிவுரை
    பாரதிதாசன் தமிழ்ப்பணி செய்ய அரசியலாளர், புலவர், அச்சகத்தார், மகளிர், முதியோர், கூத்தர், பாடகர், வணிகர் என அனைவரையும் தமிழில் பேசுக. துமிழில் எழுதுக என்றும் வேண்டுகோள் வைப்பதைக் காணலாம். இதுவே தமிழ்த்தொண்டு என்று முழங்குவதையும் இனங்காணலாம்.


1 comment:

  1. Titanium Wedding Ring - Titanium-Art
    Titanium Wedding Ring. Made in Germany, the Titanium wedding 2017 ford fusion energi titanium ring titanium bike frame has a crown of golden titanium damascus knives crown. Titanium wedding ring has titanium dog teeth a crown of golden titanium vs tungsten

    ReplyDelete