திருமங்கையாழ்வார் போற்றும் கச்சித் திருப்பரமேச்சுர விண்ணகரம்
முனைவர் கு. வெங்கடேசன்
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாளைத் திருமங்கையாழ்வார் போற்றிப் பாராட்டுகிறார். இக்கோயிலைத் திருப்பரமேச்சுர விண்ணகரம் என்பார். இதில் கூறப்படும் கருத்துக்களை இக்கட்டுரையில் காணமுற்படுவோம்.
கச்சிப் பல்லவனும் பரமேச்சுர விண்ணகரமும்
சொல், வன்சொல், பொருள்தானாகி சுவை. ஊறு, ஒலி, நாற்றம், தோற்றமும் ஆகியவன் பெருமாள். நல்அரன் நாரணன், நான்முகனுக்கு இடமாகவும் கச்சியில் இருப்பவன். பல்லவன், வில்லவன் என்று உலகில் பலராக பல வேந்தர்களும் வணங்கும் பரமேச்சுர விண்ணகரம் என்பர் திருமங்கையாழ்வார்.
சொல்லு வன்சொல் பொருள்தான் அவைஆய் சுவைஊறு ஒலி –
நாற்றமும் தோற்றமுமாய்
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான் தடம்சூழ்ந்து அழகு
ஆயகச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பலவேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே.
(நாலா. 1128)
பெருமாளைத் தொழுதலால் பல்லவனுக்கு வெற்றி
வான், கடல், இருசுடர், நிலம், மலை போன்றவை பெருமாளின் உந்தியில் தோன்ற கச்சியில் திருமால் தங்கினார். அவனின் பல வெற்றிகளுக்குக் காரணம் பரமேச்சுர விண்ணகரத்தைத் தொழுததே காரணம் என்பர் ஆழ்வார்.
தார்மன்னு தாமரைக்கண்ணன் இடம்தடம் மாமதிள்சூழ்ந்து அழகுஆயகச்சி
தேர்மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல்வாட்டிய
திண்சிலையோன்
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே.
(நாலா. 1129)
வரந்தரு மாமணிவண்ணன் இடம்கொண்டது காஞ்சி
பாம்பணை மேல் பள்ளிக்கொண்டு வரம்தரு மணிவண்ணன் இருக்குமிடம் கச்சி. புகைவரை வேலாள் அழித்த பல்லவர் வணங்கியது பரமேச்சுர விண்ணகரமாகும்.
உரம்தரு மெல்லணைப் பள்ளிகொண்டான் ஒருகால்முன்னம் மாஉருவாய்க்
கடலுள்
வரம்தரு மாமணிவண்ணன் இடம் மணிமாடங்கள்சூழ்;ந்து அழகுஆயகச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்நுகர் வேல்நெடுவாயில் உக செருவில்
முன்நாள்
பரந்தவன் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே.
(நாலா. 1130)
உலகமுண்ட பெருமாள் இருக்குமிடம் கச்சி
அண்டங்களும் எண்திசையும், ஞாலமும், அலைகடல்களும், வான், தீ, காற்று உண்டவனாய் பெருமாள் இருக்குமிடம் கச்சி என்பர் ஆழ்வார்.
அண்டமும் எண்திசையும் நிலனும் அலைநீரோடு வான்எரி கால்முதலா
உண்டவன் எந்தை பிரானதுஇடம் ஒளிமாடங்கள் சூழ்ந்து அழகு ஆயகச்சி.
(நாலா. 1131)
கசேந்திரன் துயரைப் போக்கியவன்
திண்ணிய துதிக்கையும் வலிய தாள்களையும் உடைய கசேந்திர ஆழ்வான் துன்பத்தை நீக்கிய பெருமாள் வாழுமிடம் என்பர்.
தூம்புஉடை திண்கை வன்தாள் களிற்றின்
துயர் தீர்த்து அரவம் வெருவ (நாலா. 1132)
காளியன் அஞ்சும்படி செய்தவன்
காளியன் பயந்து போகுமாறு நீர்நிறைந்த பொய்கையில் பாய்ந்த பெருமாள் வாழுமிடம் கச்சி என்பர் ஆழ்வார்.
பூம்புனல் பொய்கை புக்கான் - அவனுக்கு
இடம்தான் தடம்சூழ்ந்து அழகு ஆயகச்சி
(நாலா. 1132)
பாம்புக் கொடியும் பல்லவனும்
பல்லவன் வைகுந்தப் பெருமாளை வழிபட்டவன் என்றும், அவனுடைய கொடியில் பாம்பு உள்ளது என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
பாம்புஉடைப் பல்லவர் - கோன்பணிந்த
பரமேச்சுர விண்ணகரம் (நாலா. 1132)
பாண்டியன் திகைக்கப் போர் செய்தவன்
பெருமாளின் பக்தனான பல்லவன் பாண்டியன் திகைக்குமாறு போர் செய்து வெற்றி பெற்றவன் என்ற குறிப்பையும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
தேம்பொழில் குன்றுஎயில் தென்னவனைத்
திசைப்ப செருமேல் வியந்து (நாலா. 1132)
இரணியனின் மார்பைப் பிளந்தவன் ஊர்கச்சி
கச்சியிலே இருக்கும் பெருமாள் இரணியன் மார்பைப் பிளந்தவன் என்பர் ஆழ்வார்.
திண்படைக் கோளரியின் உருஆய்
திறலோன் அகலம் செருவில் முனநாள்
புண்பட போழ்ந்த பிரானது இடம்
பொருமாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி.
(நாலா. 1133)
குறள் வடிவு கொண்டான் நிலம்
மகாபலிச் சக்கரவர்த்தியின் வேள்வியில் அவனுக்கு முன்பு குறள்வடிவில் சென்று நீர்த்தாரை ஏற்று மூவுலகத்தையும் அளந்தவன் இடம் கச்சி என்பர் திருமங்கையாழ்வார்.
இலகிய நீள்முடி மாவலி தன்பெரு
வேள்வியில் மாண்உரு ஆய் முனநாள்
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு
இடம்தான் தடம்சூழ்ந்து அழகு ஆயகச்சி.
(நாலா. 1134)
தசரதன் மகனாகவும் குரங்களால் மலையையும், கடலை அடைத்தவனும்
தசரத சக்கரவர்த்திக்கு மன்னவனாகவும், குரங்குகளைப் படையாகவும் கொண்டவன் இராமன். மேலும், கடலைக் கடந்து இராவணனை அழிக்கவும், சீதையை மீட்கவும் கடலை அடைப்பதற்குக் குரங்குகளை மலையைக் கொண்ட வழி உண்டாக்கியவன் ராமன். அத்தகைய பெருமான் தங்கிய இடம் கச்சி.
குடத்திறல் மன்னவன் ஆய், ஒருகால்
குரங்கைப் படையா மலையால் கடலை
அடைந்தவன் எந்தை பிரானது இடம்
அணிமாடங்கள் சூழ்ந்து அழகு ஆயகச்சி.
(நாலா. 1135)
நென்மேலி படையின் வில்லவன் வணங்கிய பிரான்
காளை போன்ற மிடுக்குடையவன் வில்லவன். அவன் நென்மேலியில் படைவீட்டைக் கொண்டு அரசன் அஞ்சும்படி வேலை வலக்கையிலே பிடித்தவனாய் பணிந்த இடம் கச்சியாகும் என்பர் ஆழ்வார்.
விடைத் திறல் வில்லவன் நென்மேலியில்
வெருவ செருவேல் வலங்கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர் - கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணவர் அதுவே.
(நாலா. 1135)
நப்பின்னைக்காக ஏழு காளைகளை வென்றவனிடம்
பிறை ஒளி நெற்றியுடைய நப்பின்னைக்காக இடிபோன்ற குரலையும், வஞ்ச நெஞ்சுடைய பெரிய காளைகள் ஏழையும் போரில் கொன்றவன் வீற்றிருக்கும் இடம் கச்சி.
பிறைஉடை வாள்நுதல் பின்னைதிறத்து
முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறைஉடை மால்விடை ஏழ்அடர்த்தாற்கு
இடம்தான் தடம்சூழ்ந்து அழகு ஆயகச்சி.
(நாலா. 1136)
பாடலைப் பாடுவதால் பெறும் பயன்
பல்லவர் பணிந்து வணங்கிய பரமேச்சுர விண்ணகரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரின் பாடலைப் பாடுவர் திருமாமகளின் அருளால் உலகில் தேர் மன்னராய் உலகை ஆண்டு வருவர் என்பர் ஆழ்வார்.
பார்மன்னு தொல் புகழ்ப்பல்லவர் - கோன்
பணிந்த பரமேச்சுர வி;ண்ணவர்மேல்
கார்மன்னு நீள்வயல் மங்கையர் - தம்
தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர்மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
திருமாமகள்
- தன் அருளால் உலகில்
தேர்மன்னராய் ஒலிமா கடல்சூழ்
செழுநீர் உலகு ஆண்டு திகழ்வர்களே.
(நாலா. 1137)
முடிவுரை
காஞ்சி மாநகர் வைகுந்த பெருமாளைப் பாடிய திருமங்கையாழ்வார் கச்சிபல்லவன், வில்லவன் பற்றியும், பெருமாளைத் தொழுவதால் வெற்றியும், நென்மேலியில் படைவீடும், பாம்புக் கொடியும், பாண்டியரை வென்றதையும் கூறுவர். வரம் தருபவன், உலகமுண்டவன், இராமன், கசேந்திரனுக்கு உதவி புரிந்தவன், காளியனை அஞ்சும்படி செய்தவன், இரணியன் மார்பைப் பிளந்தவன், நப்பின்னைக்காக ஏழு எருதுகளை அடக்கியவன் என்று பெருமாளின் பெருமைகளைக் கூறுவர். மேலும் இப்பாடலைப் பாடும் அன்பர்கள் திருமகளின் செல்வம் பெற்று மன்னராய் உலகை ஆள்வர் என்பதைக் காணமுடிகின்றது.
No comments:
Post a Comment