பெரியாழ்வார்
காட்டும் குழந்தை அழகும் – பெண்களும்
முனைவர். கு. வெங்கடேசன்,
முதல்வர் & தமிழ்த்துறை தலைவர்,
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை & அறிவியல் கல்லூரி,
கீழம்பி, காஞ்சிபுரம்.
ஆழ்வார்கள்
திருமாலை பல்வேறு பாராட்டி தம் பாடல்களில் எழுதி மகிழ்ந்தனர். குறிப்பாக, பெரியாழ்வார்
கண்ணனின் அழகை ரசித்து பெண்களே வந்து பாருங்கள் என்று அழைப்பதாக எழுதியுள்ளார். இப்பாடல்களின்
மூலம் தாய்மையும் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் புலப்படுகின்றது.
இக்காலக்கட்டங்களில் குழந்தை பிறந்ததும் பணத்திற்காக விற்பதுவும், அனாதையாக விட்டு
விடுவதையும், குழந்தை வளர்த்தலை சுமையாகவும் கருதும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் குழந்தையை
ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் ஆய்வு செய்ய முற்படுவோம்.
குழந்தையின் அழகு
பெரியாழ்வார் குழந்தையின் அழகாக கூறுவதை நான்கு பிரிவுகளாக
குறிப்பிடலாம். அவை, 1. தலை சார்ந்த அழகு,
2. உடல் சார்ந்த அழகு, 3. கைகள் சார்ந்த அழகு, 4. கால்கள் குறித்த அழகு என்பனவாகும்.
தலை சார்ந்த அழகு
கண்ணனின் தலை சார்ந்த அழகில் நெற்றியழகு, கண்ணழகு, புருவ
அழகு, நாக்கழகு என ஐந்து பகுதிகளையும் இரசித்து கூறுவதைக் காணலாம்.
நெற்றியழகு
சிறுபெண்கள் மணல் வீடுகளை அமைத்து விளையாடுவர். அவர்களின்
கைகளைப் பிடித்துக் கொண்டும், மணற்சோறு ஆக்கும் சிறுபானைகளையும், முன்கைமேல் வைத்து
பேசுகின்ற நாகணவாய்ப் புள்ளையும் அபகரித்துக் கொண்டு ஓடுகின்ற கண்ணனுடைய நெற்றியை பெண்களே
பாருங்கள் என்பர். இதனை,
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும்
பரமந்தன்
நெற்றி யிருந்தவா காணீரே1
என்ற பாடலில் காணலாம். குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடுவதையும்,
சிறு மணல் பானைகளை வைத்து சோறாக்கும் விளையாட்டினையும், பறவைகளோடு பேசி பழகும் குழந்தைகளின்
செயல்களையும் குறிக்கும் கருத்துக்களையும் காணலாம்.
புருவம்:
உலகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரு பருவம் வேண்டும் என்பர்.
ஆனால், கண்ணன் வயது முதிர்வதற்கு முன்னமே உலகில் உள்ளாரைக் காப்பாற்ற தேவகி வயிற்றில்
பிறந்தவன். அத்தகையவனின் புருவத்தினைக் காணுங்கள் பெண்களே என்பர்,
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
புருவம் இருந்தவா காணீரே2
கண்
தேவர்களுடைய துன்பங்கள் தீரும்படி பூமியில் வசுதேவருக்குப்
பிள்ளையாய் வந்து பிறந்து வலிய அசுரர்கள் அழியும் படி வளர்கின்ற கண்ணனுடைய கண்கள் இருந்தபடியே
கனவளையீர் பாருங்கள் என்பர்,
விண்டுகொள் அமரர்கள் வேதனைதீர முன்
மண்டுகொள் வசுதேவர் தம்மகனாய் வந்து
கண்கள் இருந்தவா காணீரே3
வாய்
ஆயர் குலப் பெண்கள்
‘எனது குருகே எம் பக்கம் வா’ என்று இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு கொவ்வைக்
கனி போன்ற கண்ணனுடைய அதரத்தில் ஊறுகிற அமுதத்தை விரும்பித் தங்களுடைய கொவைக்கனி வாயைக்
கண்ணன் வாயோடு நெருங்கிப் பானம் பண்ணப் பெற்ற இந்தச் சிவந்த கோவை வாயை வந்து காணீர்
என்பர்,
எந்தோண்டை வாய்சிங்கம் வாவென்று
எடுத்துக் கொண்டு
செந்தொண்டை வாய்வந்து காணீரே4
நாக்கு
குழந்தையின் நாக்கில் மஞ்சள் காப்பு வழித்தல் செய்வர். அரைத்த
மஞ்சள் காப்பால் நாக்கில் வழித்து நீராடல் செய்வர். இதனால், குழந்தையின் திருவாக்கும்,
கண்களும், வாயும், புன்சிரிப்புன் அழகாக இருக்கும் என்பர்.
…………… நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவ காணீரே5
உடல் சார்ந்த அழகு
கழுத்து
கழுத்து உடலுக்கும் தலைக்கும் இடைப்பட்ட பகுதி
ஆகும். ஆனால், அனைத்தையும் விழுங்கக் கூடிய ஆற்றல் கழுத்துக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக
கண்ணன் அண்டமும், நாடும் அடங்க விழுங்கிய கழுத்தைக் கொண்டவன். அவன் கழுத்தழகை காரிகைகளே
வந்து காணுங்கள் என்பர்,
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர்6
மார்பு
மார்பு சிறப்பு பற்றிக் கூறவேண்டுமானால் வலிய செயல்களைச்
செய்தவர்களை மர்ருமே நாம் கூறுவோம். கண்ணனை யசோதா மிகப் பெரிய உரலில் கட்டி வைத்தாள்.
அப்படி இருந்தும் இரண்டு பெரிய மருத மரங்களை முறித்தான் இத்தகைய வீரமார்புடைய ஆபரணம்
அசைந்து விளங்கும் திருமார்பைப் பெண்களே வந்து பாருங்கள்,
பெருமா இரலில் பிணிப்புண்டு இருந்து
அங்கு
இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
திருமார்பு இருந்தவா காணீரே7
தோள்
நாலைந்து மாதத்தளவில் காலைத் தூக்கிச் சகடாசுரனை உதைத்துவிட்டு
வளைந்த கோரப் பற்களையுடைய பூதனையின் உயிரையும் முடித்த கண்ணன் தோள்கள் இருக்கும் விதத்தை
பெண்களே பாருங்கள் என்பர்,
நாங்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடிப்போய்
தோள்கள் இருந்தவா காணீரே8
வயிறு
கண்ணனுக்கு பாலூட்டி, அவனறியாத வண்ணன் ஏமாற்றி, தம் எண்ணப்படி
கயிற்றால் கட்டி வைத்த வயிறு இருந்த நிலையினை வளையணிந்த பெண்களே பாருங்கள் என்பர்,
பதறப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே9
இடை
குவலாபீடம் என்னும் மதயானையைத் தன் வசமாக்கிக் கொண்ட பாகனைக்
கொன்று யானையின் கொம்புகளை முறுத்துக்கொண்டு கம்சன் இருக்கும் இடத்தினைத் தேடிக் கொண்டு
பாய்தோடிய கணனின் நகையணிந்த திருவரைய பாருங்கள் என்பர்,
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனை
பெருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும்பரமன்
தன்
மருங்கும் இருந்தவா காணீரே10
நாபி
தன்னோடு விளையாட வந்த சிறு பிள்ளைகளின் கூட்டத்தில் தன்
வலிமையைக் காட்டிக் கொண்டு கொம்பு முளைத்த யானைக்குட்டி போல் தானே முக்கியனாய் நின்று
விளையாடும் கண்ணனின் நாபியை மாதர்களே பாருங்கள் என்பர்,
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
உந்தி யிருந்தவாக் காணீரே11
வசு தேவருக்கும் தேவகிக்கும் அத்தத்தின் பத்தான் நாள் தோன்றிய
கண்ணனின் முத்துக்கள் முகர்ந்த அரைஞாணைப் பாருங்கள் என்பர். முத்தம் இருந்தவா என்பதை ( முத்தம் – மூத்திரக் கருவி என்பது மறுவியது)
அரைஞாணைக் குறிக்கும்,
மத்தக் களிற்று வசிதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
முத்தம் இருந்தவா காணீரே12
கைகளை குறித்த அழகு
உள்ளங்கைகள்
யசோதைப் பிராட்டியால் வளர்க்கப்படுகின்ற நீலநிறத்துக் கண்ணன்
உள்ளங்கைகளில் திருவாழியின், திருச்சங்கும் அமைந்துள்ளது. இத்தகைய கண்ணனின் உள்ளங்கையைக்
காணீரோ பெண்களே என்பர்.
மைத்தடக்கண்ணி யசோதை வளர்கின்ற
செய்த்தலை நீலநிறத்து சிறுப்பிள்ளை
நெய்த்தலி நேமியும் கங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே13
கால்கள் குறித்த அழகு
தொடைழயகு
இரணியனின் மார்பைப் பளந்தவனும், பூதனையின் பாலுண்டவனும்
ஒன்றும் அரியாமே உறங்குபவனைப் போலப் படுத்திருக்கும் கண்ணனுடைய திருத்தொடைகளை பெண்களே
காணுங்கள் என்பர்.
பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத்து
உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறங்கொள் இரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே14
முழங்கால்
பானையில் இருந்த நெய்யை உண்டதனால் கண்ணனை கோபத்துடன் கையைப்
பிடித்து கோலேடுத்து அடிக்க முயன்றபோது அச்சத்தில் இருந்த கண்ணணின் முழங்கால் அழகைக்
காணீர்.
உழந்தான் நறுநெய்யோர் ஓர்தடா உண்ண
பழந்தாம்பால் ஒச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே15
கணைக்கால்
யசோதையிடம் பாலுண்டு வயிறு நிரம்பும் திருவடிகளில் வெள்ளித்
தண்டை விளங்கும் கணைக்கால் இருந்தவற்றை காணீரே என்பர்.
இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும்
கணைக் கால் இருந்தவா காணீரே16
பத்துவிரல்கள்
கண்ணனின் திருவடிகளில் முத்துக்களையும், இரத்தினங்களையும்,
வயிரங்களையும், நல்ல பொன்னையும் பதித்துச் சேர்த்தாற் போல விரல்கள் பத்தும் ஒன்றோடொன்று
ஒத்து அமைந்திருக்கின்ற படி பெண்களே காணீர் என்பர்.
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே17
பாத கட்டைவிரல்
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே18
தேவகியின் வயிற்றில் பிறந்து யசோதையால் வளர்க்கப்பட்ட கண்ணான்
தன் கையில் பாதக் கட்டவிரலைச் சுவைக்கின்றான் பவளம் பாருங்கள் பெண்களே என்பர்
முடிவுரை
1. தலை, உடல், கை, கால்கள் என் நான்கு பகுதிகளிலும் உள்ள கண்ணனின்
உடல் உறுப்புகளை புகழ்ந்து பெரியாழ்வார் பாடுவதைக் காணலாம்.
2. பெண்கள் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்பையும் அழகுடன் பார்ப்பதைக்
காணலாம்.
3. குழந்தைகளுக்கு மஞ்சள் பூசி வாயில் எச்சிலை வழிப்பதன் வாயிலாக
பேச்சு நன்றாக வரும் என்ற கருத்தைக் காணலாம்.
4. கண்ணன் செய்த அசுரத்தனமான விளையாட்டுக்களை அறிய முடிகின்றது.
5. குழந்தைகள் தாய் அடிக்கும் பொழுது பயத்துடன் இருக்கும் நிலை,
முழங்கால்களை வைத்திருக்கும் நிலையை அறியலாம்.
6. குழந்தை கட்டை கால் விரலை சுவைப்பதைக் காணமுடிகிறது.
7. வெள்ளித்தண்டு கணைக்காலில் அணிவதைத் காணலாம்.
8. முத்துப் போன்ற அணிகலன் குழந்தைகளின் சிறுநீர் கழிக்கும்
பகுதியில் அணிவிக்கும் போக்கினை அறியலாம்.
9. வீரத்திற்கு உதாரணமாக புருவம், தோள், மார்பு, வயிறு பற்றிய
செய்திகளை இனங்காணலாம்.
அடிக்குறிப்புகள்
1. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 41)
2. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 39)
3. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 38)
4. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 36)
5. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 37)
6. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 35)
7. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 32)
8. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 33)
9. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 31)
10. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 29)
11. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 30)
12. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 28)
13. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 34)
14. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 27)
15. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 26)
16. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 25)
17. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 24)
18. பெரியாழ்வார் திருமொழி (பாடல். எண். 23)
No comments:
Post a Comment